சிக்கமகளூருவில் நடக்கும் சுதந்திர தின விழாவில், கலெக்டர் ரமேஷ் தேசிய கொடி ஏற்றுகிறார்
|சிக்கமகளூருவில் நடக்கும் சுதந்திர தின விழாவில், கலெக்டர் ரமேஷ் தேசிய கொடி ஏற்றுகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி வீடுகள்தோறும் தேசியகொடி ஏற்ற மத்திய அரசின் வேண்டுகோளின்படி சிக்கமகளூரு மாவட்டத்தில் 2¼ லட்சம் தேசியகொடிகள் வினியோகிக்கப்படுகிறது. இதில் மாவட்ட நிர்வாக சார்பில் 75 ஆயிரம் கொடிகள் வினியோகிக்கப்பட உள்ளது.
அதன்படி வருகிற 13-ந்தேதி காலை முதல் 15-ந்தேதி மாலை வரை வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் தேசியகொடி பறக்க விடலாம். அரசு அலுவலகங்களில் சில கட்டுப்பாடுகளுடன் தேசியகொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
சிக்கமகளூருவுடன் சேர்த்து தாவணகெரேவுக்கும் பொறுப்பு மந்திரியான பைரதி பசவராஜ், தாவணகெரேயில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்கிறார். இதனால் சிக்கமகளூரு மாவட்ட சுதந்திர தின விழாவுக்கு கலெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி தேசியகொடி ஏற்றுகிறார்.
மேலும் போலீஸ் அணிவகுப்பு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.