மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது ஏன்.? சரணடைந்தவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.!
|டிபன் பாக்சில் வெடிபொருள் வைத்துவிட்டு, அதனை ரிமோட் மூலம் மார்ட்டின் வெடிக்கச்செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ள நிலையில், குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள டிஜிபி கூறினார். .
இதற்கிடையில், திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் தானாக சரணடைந்தார். மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் எனக்கூறி அவர் சரணடைந்துள்ளார்.
மேலும் வீடியோ ஒன்றையும் அந்த நபர் வெளியிட்டுள்ளார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என அவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், கேரளா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என கேரள காவல்துறை உறுதிபடுத்தி உள்ளது. டிபன் பாக்சில் வெடிபொருள் வைத்துவிட்டு, அதனை ரிமோட் மூலம் வெடிக்கச்செய்ததாகவும், யூடியூப் மூலம் கடந்த 6 மாதமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக்கொண்டதாகவும் மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், ரிமோட் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மார்ட்டின் கூறிய வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.