வேலையில் குறை கண்டுபிடித்த சீனியரை கத்தியால் குத்தி கொலை செய்த ஐ.டி. ஊழியர்
|தனது வேலையைப் பற்றி குறை சொன்னதால் ஆத்திரத்தில் தேவநாதனை கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் சாந்தல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் தேவநாதன் லக்ஷ்மிநரசிம்மன் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் சாந்தல் என்ற நபரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று ஷியாம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தேவநாதன், சாந்தல் மற்றும் பவான் அணில் குப்தா ஆகிய 3 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது சாந்தலின் வேலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அவரது செயல்திறன் குறைவாக இருப்பதாகவும் தேவநாதன் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சாந்தல், கத்தியை எடுத்து தேவநாதனின் நெஞ்சில் குத்தியுள்ளார். அந்த கத்தி அவரது இதயத்தை துளைத்து அவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே தேவநாதனின் உடலை சாந்தல் மற்றும் பவான் அணில் குப்தா ஆகிய இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தேவநாதன் பாத்ரூமில் தவறி விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
ஆனால் காயத்தைப் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
தனது வேலையைப் பற்றி குறை சொன்னதால் ஆத்திரத்தில் தேவநாதனை கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் சாந்தல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சாந்தல் மற்றும் பவான் அணில் குப்தா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.