"தவறு செய்திருந்தால் விசாரணை" - அதானி குழு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து
|அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போல தெரிவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. மேலும் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த சூழலில் அதானி விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது ஒற்றுமையை காட்டும் விதமாக இருந்தது.
இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை. ,
இதுபோன்ற அறிக்கைகள் இதற்கு முன்பாகவும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் சில நாட்கள் கடும் அமளி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்திற்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விட்டது. அதானி குழுமம் மீது குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது. இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்படும் போது, நாட்டில் சலசலப்பை உண்டாக்குகிறது, செலவு ஏற்படுகிறது....பொருளாதாரத்தை பாதிக்கிறது.
இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தை குறி வைத்து தாக்குவது போல் ஹிண்டனர்க் அறிக்கை அமைத்திருக்கிறது. அப்படி ஏதேனும் அவர்கள் தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று சரத் பவார் கூறினார்.
சரத்பவார் வெளிப்படையாகவே அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மாற்றாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.