< Back
தேசிய செய்திகள்
செல்போன் கேமரா வைத்து ஆபாச வீடியோ எடுத்தது உண்மை-ஏ.பி.வி.பி. அமைப்பினர் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

செல்போன் கேமரா வைத்து ஆபாச வீடியோ எடுத்தது உண்மை-ஏ.பி.வி.பி. அமைப்பினர் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

உடுப்பி கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா வைத்து மாணவிகளை வீடியோ எடுத்தது உண்மைதான் என்று அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மங்களூரு:-

கல்லூரி முன்பு போராட்டம்

உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா மூலம் மாணவியை ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) கல்லூரி முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள், மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தது உண்மை, இந்த செயலில் ஈடுபட்ட மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

உடுப்பி தனியார் கல்லூரி கழிவறையில் செல்போன் கேமராவை வைத்து, மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுக்கும் சம்பவம் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு சமுதாயத்தை சேர்ந்த 3 மாணவிகள், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பர்களிடம் கொடுத்துள்ளனர்.

மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும்

அதாவது கார், மோட்டார் சைக்கிளில் வந்த ஆண் நண்பர்கள், மாணவிகளிடம் செல்போனை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்கள் செல்போன்களுக்கு அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டனர். அந்த செல்போனை போலீசார் கைப்பற்றியதாக கூறியதில் உண்மை இல்லை. இன்று வரை அந்த செல்போன் மாணவிகள் 3 பேரின் கையில்தான் உள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் சில உண்மைகளை மறைக்க பார்க்கின்றனர். இது ஒரு சமுதாயத்தை சேர்ந்த மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு இல்லை. பல மாணவிகளுக்கு நடந்த கொடுமை.இதற்கு போலீசார் உடனே தீர்வு காணவேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும். மேலும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடியோ ஆதாரம் இல்லை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு வீடியோவிற்கு பழி வாங்கும் நோக்கில், வதந்திகளை பரப்பி வருகின்றனர். போலீசார் நடத்திய ஆய்வில், வீடியோ எடுத்ததற்கான மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தோம். தடய அறிவியல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு அனுப்பி இருப்பதாக குற்றச்சாட்டு வந்தால், அவர்களின் செல்போன்களையும் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்படும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்