ஆயுத படைகள் சமூகம், நாட்டின் கேடயம் ஆக செயல்படுவது நமது அதிர்ஷ்டம்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி
|சமூகம் மற்றும் நாட்டின் கேடயம் ஆக ஆயுத படைகள் எப்போதும் செயல்படுவது நமது அதிர்ஷ்டம் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
டேராடூன்,
ராணுவம் உள்ளிட்ட படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், 3 ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் பீகார் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோரின் வீடுகள் தாக்கப்பட்டன. போராட்டங்களை சில பயிற்சி நிலையங்கள் தூண்டி விட்டுள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளி கிழமை நடந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி டேராடூனில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாடினார். அவர் பேசும்போது, ஆயுத படைகள் எப்போதும் சமூகத்தின் கேடயம் போல் செயல்படுவதும், நாட்டின் கேடயம் ஆக இருப்பதும் நமது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து முதல்-மந்திரி பேசும்போது, கணேஷ் ஜோஷி (உத்தரகாண்ட் மந்திரி) கூறும்போது, போராட்டத்திற்கு பொதுவான இளைஞர்கள் என யாரும் வரவில்லை என கூறினார். ஆனால், போராட்டத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களே ஆவர் என தமி கூறியுள்ளார்.
நம்முடைய இல்லங்களில் உள்ள இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான திசைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.