'காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம்' - மத்திய வெளியுறவுத்துறை தகவல்
|காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே சமயம் காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். காசாவில் இந்தியர்கள் 4 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாக மீட்போம் என்றும் அவர் கூறினார். மேலும் காசாவில் நடந்த தாக்குதல்களில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.