லோக் அயுக்தாவால் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை; குமாரசாமி பேட்டி
|லோக் அயுக்தாவால் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.பவனில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து, லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், பிற முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக ஊழல் தடுப்பு படை கொண்டு வரப்பட்டது. இதன்காரணமாக பல ஊழல் வழக்குகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது. தற்போது லோக் அயுக்தா அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கி இருப்பதால், ஊழல் முற்றிலும் ஒழிந்து விடும் என்பது சாத்தியமில்லை என்பது எனது கருத்தாகும். விதானசவுதாவில் உள்ள 3-வது மாடி சுத்தமாக வேண்டும். அப்போது தான் ஊழல், முறைகேடுகள் நடக்காது. ஏனெனில் மாநிலத்தில் தற்போது ஊழல், முறைகேடுகள் எல்லை மீறி சென்று விட்டது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்படுகிறது. அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடக்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை திட்டத்திலும் முறைகேடு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.