< Back
தேசிய செய்திகள்
கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை
தேசிய செய்திகள்

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை

தினத்தந்தி
|
24 Jan 2024 4:44 PM IST

கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாயாவதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"நாட்டில், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடி சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். நீதி மற்றும் சமத்துவ வாழ்வைக் கொடுத்த மக்களின் தலைவர் கர்பூரி தாகூருக்கு அவரது 100-வது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன்.

இரண்டு முறை பீகாரின் முதல்வராக இருந்த கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கும் மத்திய அரசின் தாமதமான முடிவை வரவேற்கிறோம். நாட்டின் இந்த உயரிய சிவிலியன் கவுரவத்திற்காக அவரது குடும்பத்தினருக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இதேபோல், தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழவும், சொந்த காலில் நிற்கவும் காரணமானவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம். இது வரலாற்று சிறப்புமிக்கது, மற்றும் மறக்க முடியாதது. கோடிக்கணக்கான மக்களின் விருப்பப்படி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டியது அவசியம்"

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்