தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது கடினம்-மந்திரி செலுவராயசாமி பேட்டி
|கே.ஆர்.எஸ். அணையில் 15.34 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது கடினம் என்று விவசாய துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
மண்டியா:-
கே.ஆர்.எஸ். அணை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நேரடியாக காவிரியில் பாய்ந்தோடி தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம்(ஜூன்) 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஆனால் கடந்த மாதம் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இந்த மாதம் கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பலத்த மழை பெய்தது. மலைநாடு மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் சிவமொக்கா, சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாசன் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்தது. ஆனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பும் அளவிற்கு இதுவரையில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்க்கவில்லை.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை உள்பட மாநிலத்தில் பல்வேறு அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரைக் கொண்டு அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மக்களுக்கு குடிநீர் மட்டுமே வினியோகம் செய்ய முடியும் என்று நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தமிழகத்துக்கு, கர்நாடகம் 192 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
அதாவது ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை-34, ஆகஸ்டு-50, செப்டம்பர்-40, அக்டோபர்-22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3, பிப்ரவரி-2.5, மார்ச்-2.5, ஏப்ரல்-2.5, மே-2.5 என மொத்தம் 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
15.34 டி.எம்.சி. தண்ணீர்
ஆனால் தற்போது அணையில் 89 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அதாவது நேற்றைய நிலவரப்படி அணையில் 15.34 டி.எம்.சி. தண்ணீரே இருந்தது. இதில் இருந்து 8 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே வெளியேற்ற முடியும் என்றும், ஆனால் அந்த தண்ணீரை வைத்து தான் மக்களுக்கு அடுத்த ஓரிரு மாதங்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி மண்டியாவில் நேற்று விவசாய துறை மந்திரி செலுவராயசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடினம்
கே.ஆர்.எஸ். அணையில் இன்று(நேற்று) நிலவரப்படி 15.34 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மக்களுக்கு குடிநீர் மட்டுமே வழங்க முடியும். விவசாயத்துக்கு கூட திறந்துவிட முடியாது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விடுவது என்பது கடினம்.
இருப்பினும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் நீர்ப்பாசன துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் பேசி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசிடம்...
இதுபற்றி மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பரீஷ் கூறுகையில், 'தற்போதைக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது கஷ்டம் தான். தீர்ப்பாயம் அறிவித்த நீர் ்பங்கீட்டில் பல விதிகள் உள்ளன. இதுபற்றி மாநில மந்திரியிடம் ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் தெரியப்படுத்துவேன். மேலும் கோர்ட்டிலும் இங்குள்ள சூழ்நிலை குறித்து நம்ப வைக்க பாடுபடுவேன்' என்றார்.