< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதா? - சோனியாவுக்கு மத்திய மந்திரி கண்டனம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதா? - சோனியாவுக்கு மத்திய மந்திரி கண்டனம்

தினத்தந்தி
|
7 Sept 2023 5:59 AM IST

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இந்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நமது ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை நீங்கள் (சோனியா) அரசியலாக்க முயற்சிப்பதும், தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என தெரிவித்தார்.

அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் முன் கூட்டியே கலந்தாலோசிப்பது கிடையாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு அரசால் பதிலளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்