< Back
தேசிய செய்திகள்
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்
தேசிய செய்திகள்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்

தினத்தந்தி
|
23 April 2023 2:11 AM IST

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறினார்

ககன்யான் சோதனை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ராக்கெட் 12-14 கி.மீ. வரை சென்று அதன் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்.

தொடர்ந்து 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்த சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

அமெரிக்காவின் 'ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த ராக்கெட் சில நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பி வரும்.

வணிக ரீதியான ராக்கெட்

இஸ்ரோவின் வரவிருக்கும் விண்வெளி பயணங்களில், விண்வெளி நிறுவனம் 'ஆதித்யா எல்-1', வழிகாட்டும் செயற்கைகோள்கள், அதிக எடை கொண்ட ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.யுடன் வணிக ரீதியான ஏவுதல் மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவுகணை வாகனத்துடன் (எஸ்.எஸ்.எல்.வி.) ஒரு பணியை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதேபோல், '72 ஒன் வெப்' செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு - ரூ.1,000 கோடிக்கு மேல் எல்.வி.எம் 3 ராக்கெட்டுடன் நல்ல வணிக வாய்ப்பு உள்ளது.

ராக்கெட்டின் மேல்தளம்

விண்வெளி நிறுவனம் அதன் செயல்திறனில் சமரசம் செய்யாமல் செலவை குறைக்க சில மறுசீரமைப்புகளை செய்து வருகிறது.

குறிப்பாக ராக்கெட்டின் மேல் பகுதி நீண்ட காலம் இருக்கும் என்பதால் அதனை சுற்றுப்பாதை தளமாக பயன்படுத்துவது குறித்த எண்ணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அதன்படி தற்போது அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி.55 ராக்கெட்டின் மேல் தளத்தில் அறிவியல் சோதனைகள் நடத்துவதற்கான 7 கருவிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்