இஸ்ரோ விஞ்ஞானியிடம் ரூ.18 லட்சம் மோசடி
|இஸ்ரோ விஞ்ஞானியிடம் ரூ.18 லட்சம் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு உப்பார்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு மருத்துவ படிப்புக்கான சீட் வாங்குவதற்கு முயன்றார். அப்போது அவருக்கு அருண் தாஸ் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ரூ.18 லட்சம் கொடுத்தால் மருத்துவ சீட் வழங்குவதாக கூறினார். அதை உண்மை என நம்பிய அவர், ரூ.18 லட்சத்தை பல்வேறு தவணைகளாக செலுத்தினார். ஆனால் அவரது மகளுக்கு எந்த கல்லூரியில் இருந்தும் மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து அருண் தாசை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர் உப்பார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.