வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 'இன்சாட்-3டி எஸ்' செயற்கை கோள்
|'இன்சாட்-3டி எஸ்' செயற்கை கோள் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது ஆகும்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டி எஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. இந்த நிலையில், ஜி.எஸ்.எல்.வி-எப்.14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் சரியான திசையில் பயணித்து செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த செயற்கை கோள் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.