கே.சிவன் குறித்த கருத்தால் கிளம்பிய சர்ச்சை; சுயசரிதையை திரும்பப் பெறுவதாக இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
|சுய சரிதை புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின
திருவனந்தபுரம்,
இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய 'நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற தன்வரலாற்று நூலை(சுயசரிதை) ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக இஸ்ரோ தலைவர் பதவி உட்பட பல முக்கியமான பொறுப்புகள் தனக்கு கிடைப்பதை தடுக்க, இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் முயற்சித்ததாக சோம்நாத் குறிப்பிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல், சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகள் குறித்தும் சோம்நாத் விமர்சித்து எழுதியிருந்ததாக தகவல் வெளியானது. இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் இந்த புத்தகம் சர்ச்சையையும் விவாதத்தையும் நேற்று சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது சுயசரிதை புத்தகத்தை திரும்பப் பெறுவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோம்நாத் கூறுகையில், "தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல, எனவே இந்த புத்தக வெளியீட்டினை ரத்து செய்து, புத்தகத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன்" என்று கூறினார்.