மும்பை பயங்கரவாத தாக்குதல் முதன்மை குற்றவாளிகளை ஐ.எஸ்.ஐ. பாதுகாக்கிறது: மணீஷ் திவாரி எம்.பி. பேச்சு
|மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆனபின்னரும், அதற்கான பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் முதன்மை குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படவில்லை.
புதுடெல்லி,
மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பாகிஸ்தானின் பயங்கரவாத கும்பலான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதிகள் 10 பேர் அத்துமீறி புகுந்து பல்வேறு இடங்களில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட 175 பேர் கொல்லப்பட்டனர். 320-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் 15-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் எம்.பி.யான மணீஷ் திவாரி கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதல், இந்தியாவில் நடந்த அதிபயங்கர பயங்கரவாத தாக்குதல் ஆகும்.
நாட்டின் உணர்வுநிலை மற்றும் ஆத்மாவை அது குலுக்கி விட்டது. இந்த தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆனபின்னரும், அதற்கான பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் முதன்மை குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படவில்லை.
இதற்கான காரணம் தெளிவாக உள்ளது. ஏனெனில், தெற்காசியா முழுவதும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை பரப்பும் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்று பேசியுள்ளார்.