தடை செய்த பின்னும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு ரகசியமாக செயல்படுகிறதா? - கேரளாவில் என்.ஐ.ஏ. அதிரடி
|கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
கோழிக்கோடு,
பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர்.
இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை தந்தனர்.
இவர்கள் கேரளாவில் 56 இடங்களில் அதிகாலை முதலே சோதனை தொடங்கப்பட்டது. கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெற்றது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல ஆலப்புலா, மலப்புரம் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கொல்லம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுக்க தடை செய்யப்பட்டாலும், கேரளாவில் இந்த அமைப்பு ரகசியாமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட இதன் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.