பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா?; குமாரசாமி கேள்வி
|பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகம் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தகவல்-உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு பிரபலமாக விளங்குகிறது. இனி இது மாறலாம். ஏனெனில் வணிக வளாகங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் கர்நாடகம் இனி, குடிகாரர்களின் பூங்காவாக மாறும். தேர்தலுக்கு முன்பு அனைத்து தரப்பு மக்கள் வாழும் அமைதி பூங்கா என்று கர்நாடகத்தை கூறினர். வெற்றி பெற்ற பிறகு கர்நாடகம் குடிகாரர்களின் பூங்கா என்று சொல்கிறார்கள்.
திட்டங்களின் பெயரில் கொள்ளையடிக்கும் இந்த அரசு, வீடு வீடாக சென்று மதுபானம் வழங்க திட்டமிட்டுள்ளது. இது காங்கிரஸ் அரசின் 6-வது உத்தரவாத திட்டம். உத்தரவாத திட்டங்களால் மக்களை ஏமாற்றியது போதாது என்று, கிராம பஞ்சாயத்துகளிலும் மதுபான கடைகளை திறக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இது வெட்கக்கேடானது. அரிசி, சோளம், சிறு தானியங்கள், காய்கறி, பால், தயிர் கிடைக்கும் பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குவது சரியா?. இது தான் சமதர்மமா?.
3 ஆயிரம் மக்கள் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகளை திறந்து வீடுகளை பாழாக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. பொய் உத்தரவாத திட்டங்களை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ள பெண்களுக்கு கேடு காலம் தொடங்கியுள்ளது. இது குடும்பங்களை கெடுக்கும் அரசு. பெண்களை பலப்படுத்துகிறோம் என்று சொல்லும் இந்த அரசு அவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சி செய்கிறது.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.