மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?; பரபரப்பு தகவல்கள்
|மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி அன்று மாலையில் ஒரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பயங்கரவாதி ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததை தேசிய விசாரணை முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் குக்கர் வெடிகுண்டுடன் பல வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிர விசாரணை
இந்த நிலையில் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், நாச வேலையை அரங்கேற்றவும் திட்டமிட்டு மங்களூருவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பேரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஷாரிக், கோவை கார் குண்டுவெடிப்பில் உடல் கருகி பலியான ஜமேஷா முபின், ஊட்டியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோரிடம் வெடிகுண்டு தயாரிப்பது பற்றியும், அவற்றை கையாள்வது பற்றியும் கற்றுக்கொண்டு பயிற்சி பெற்றதாக ஐ.எஸ். அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம்
அதன்பேரில் கோவை போலீசார் மங்களூருவுக்கும், மங்களூரு போலீசார் கோவைக்கும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன்மூலம் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும், ஷாரிக்கிற்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து இதுபற்றி போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜவுளி வியாபாரம் செய்த ஷாரிக்
என்ஜினீயரிங் பட்டதாரியான ஷாரிக் சிவமொக்காவில் ஒரு ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் தான் ஒரு பயங்கரவாதி என்பதை வெளிஉலகில் எங்கும் காட்டிக் கொண்டதில்லை. அவர் அமைதியான முறையில் சாதாரணமாக நடமாடி ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். அவர் மீது யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. மிகவும் நல்லவர் போல் நடந்து கொண்ட ஷாரிக் தான், வெடிகுண்டுகளை தயாரித்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஷாரிக்கின் வீட்டிற்கு வந்த பெண் யார்?
மைசூருவில் பயங்கரவாதி ஷாரிக் தங்கி இருந்த வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையுடன் வந்துள்ளார். அவர் யார்?, எதற்காக அவர் அங்கு வந்தார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏனெனில் ஷாரிக் தங்கி இருந்த வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்கள் இருந்துள்ளன. இதனால் அந்த பெண்ணுக்கு எப்படியும் ஷாரிக் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரிந்திருக்கும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.