கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா..? எக்ஸ்ட்ரா கட்டணம் இருக்கான்னு செக் பண்ணுங்க
|வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தபோது, கூகுள் நிறுவனத்தின் புதிய அப்டேட் தொடர்பாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது.
உலகம் முழுவதும் இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதேபோல் பெரும்பாலான பணப் பரிமாற்றமும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது. யுபிஐ எனப்படும் பணபரிமாற்ற வசதியின் மூலம் உடனுக்குடன் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பண பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் இந்த யுபிஐ செயலிகளில் கூகுள் பே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சாதாரண டீக்கடை முதல் பெரிய வர்த்தக வளாகம் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே ஆக்கிரமித்துள்ளது. கோடிக்கணக்கான பயனர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை எளிதாக அனுப்புகின்றனர். பணம் அனுப்புவது, பெறுவது மட்டுமல்லாமல் மொபைல் ரீசார்ஜ் செய்வது, பல்வேறு பொது சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவது என பல விஷயங்களுக்கு கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது. இந்த பணப்பரிமாற்றங்களுக்கு கூகுள் பே கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
இந்நிலையில் கூகுள் பே தனது நிலைப்பாட்டை மாற்றி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது இனி மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் கூகுள் பே மூலம் தங்கள் செல்போன்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும்போது, கூகுள் பே இந்த கட்டணத்தை இனி வசூலிக்கும்.
இந்த மாற்றம் தொடர்பாக கூகுள் நிறுவனம் முறைப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், வாடிக்கையாளர் ஒருவர், ஆன்லைனில் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தபோது, கூகுள் நிறுவனத்தின் புதிய அப்டேட் தொடர்பாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது. அந்த வாடிக்கையாளர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில், ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 749 ரூபாய் ரீசார்ஜ் செய்தற்காக ரூ.3 கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டணம் யுபிஐ மற்றும் கார்டு பரிவர்த்தனை இரண்டிற்கும் பொருந்தும்.
எக்ஸ் தளத்தில் அந்த வாடிக்கையாளர் சில கூடுதல் விவரங்களையும் அளித்துள்ளார். அதில், 100 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்தால் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ரூ.100 முதல் ரூ.200 வரையிலான ரீசார்ஜ்-க்கு 2 ரூபாயும், ரூ.200 முதல் ரூ.300 மற்றும் அதற்கும் அதிகமான ரீசார்ஜ்-க்கு 3 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியிருந்தார்.
கூகுள் நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக யுபிஐ செயலியில் சில மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் நவம்பர் 10 அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு முன்பும் அதற்கான கட்டணம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.