சந்திரபிரியங்கா பதவி நீக்கமா, ராஜினாமாவா?- புதுச்சேரி மக்களிடையே குழப்பம்
|அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டாரா, அல்லது ராஜினாமா செய்தாரா என புதுவை மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது.
புதுச்சேரி,
காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார். கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார். இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.
இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது, சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது. ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர். விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.
தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும். சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை.
புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது. அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது. மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.