< Back
தேசிய செய்திகள்
தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன்  தயாராகும் விவசாயிகள்
தேசிய செய்திகள்

தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன் தயாராகும் விவசாயிகள்

தினத்தந்தி
|
20 Feb 2024 4:05 PM IST

பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்தை விவசாயிகள் ஏற்கவில்லை.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லிக்குள் பேரணியாக சென்று அமைதியாக போராடப்போவதாக கூறினர். ஆனால், அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதையும் மீறி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடிக்கின்றனர்.

இதற்கிடையே விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என மத்திய அரசு முன்மொழிந்தது. இதுபற்றி விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முன்வந்தது.

ஆனால், அரசின் இந்த முடிவை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இது விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என கூறினர். அத்துடன், நாளை (புதன் கிழமை) டெல்லி நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அறிவித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அல்லது எல்லையில் உள்ள தடுப்பான்களை நீக்கி விட்டு, அமைதியாக போராடுவதற்காக டெல்லி நோக்கி செல்ல அனுமதியுங்கள் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

எல்லையில் உள்ள தடுப்பு அரண்களை மீறி டெல்லி நோக்கி விவசாயிகள் முன்னேறினால், அவர்களை தடுத்து விரட்டியடிக்கும் நடவடிக்கையில் போலீசார் மீண்டும் ஈடுபடுவார்கள். குறிப்பாக கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவார்கள். எனவே, கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ள இரும்பு கேடயங்கள், சணல் சாக்குகள் ஆகியவற்றுடன் விவசாயிகளும் தயாராகி வருகின்றனர். பஞ்சாப் - அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் இந்த பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. தடைகளை தாண்டி செல்ல விவசாயிகள் முடிவு செய்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் போன்று விஷமிகள் யாரும் போராட்டத்தில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காக, ஊடகவியலாளர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்