< Back
தேசிய செய்திகள்
ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு
தேசிய செய்திகள்

ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு

தினத்தந்தி
|
25 Aug 2022 4:07 AM IST

பயணிகளின் விவரங்களை பணமாக்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு தொடர்பாக ரெயில்வே அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்திய ரெயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு வசதியையும் அளிக்கிறது.

ஐ.ஆர்.சி.டி.சி. பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல். அவர்களில் 7.5 கோடிப் பேர் இதன் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள்.

இந்நிலையில், தங்கள் பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர் விவரங்களை பணமாக்குவதற்கு ஆலோசகருக்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகளை தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அழைத்துள்ளது. இந்த கூட்டத்துக்கான நோட்டீசை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதே நாளில், இவ்விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமையிலான இந்தக் குழு முன்பு டுவிட்டர் இந்தியா பிரதிநிதிகளும் ஆஜராக உள்ளனர்.

குடிமக்களின் தகவல் பாதுகாப்பு, தனியுரிமை தொடர்பாக அது சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கூட்டங்கள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் விவரங்களை பணமாக்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு தொடர்பாக ரெயில்வே அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அது திரும்பப்பெறப்படும் என்று கூறப்படுகிறது. புதிய மசோதாவை கொண்டுவருவதற்காக, தகவல் பாதுகாப்பு தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் இருந்து மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதுதான் காரணம்.

மேலும் செய்திகள்