ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இனி மற்றவர்களுக்கும் இ-டிக்கெட் எடுக்கலாம் - ரெயில்வே அமைச்சகம் விளக்கம்
|ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம்.
புதுடெல்லி,
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரெயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவற்றுக்கு ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இ-டிக்கெட் எடுக்கலாம்.
ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்" என்று அவர் கூறினார்.