செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கம் தாக்குதல் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
|ஈரானால் ஹவுதிக்கு வழங்கப்படும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன்,
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடங்களுள் ஒன்றான செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் காரணமாக பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளன. இந்த ஹவுதி இயக்கம் ஈரான் ஆதரவுடன் இயங்கி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானால் ஹவுதிக்கு வழங்கப்படும் ஆதரவும் நிறுத்தப்பட வேண்டும் என பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் ஒன்று திரண்டு தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இந்த தாக்குதல்கள் அந்த பிராந்தியம் முழுவதும் பரவக்கூடும் எனவும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.