சமூக ஆர்வலருடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு
|ரோகிணி சிந்தூரிக்கு எதிராக வழக்கு தொடரும்படி சமூக ஆர்வலருடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
ரோகிணி சிந்தூரிக்கு எதிராக வழக்கு தொடரும்படி சமூக ஆர்வலருடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச புகைப்படங்கள்
கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி, அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ரூபா, அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அதாவது, ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, ரோகிணி சிந்தூரி தனது தனிப்பட்ட ஆபாச புகைப்படங்களை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும், அதன் உள்நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி அவர் மைசூரு கலெக்டராக பணியாற்றியபோது சட்டவிரோதமாக செயல்பட்டு நீச்சம் குளம் கட்டியதில் தவறு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், பெங்களுருவில் சட்ட விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பதி தங்கும் விடுதி கட்டுமான திட்டத்தில் முறைகேடு, சாம்ராஜ்நகர் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறந்த விவகாரம் ஆகியவற்றில் ரோகிணி சிந்தூரி தவறு செய்தார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரோகிணி சிந்தூரி, ரூபா மன நலம் பாதித்தவர் போல் பேசுவதாக விமர்சித்தார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 2 பேரும் தலைமை செயலாளர் வந்திதா சர்மா முன்பு ஆஜராகி, தன்னிலை விளக்கம் அளித்தனர்.
பரஸ்பரம் புகார்
மேலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் புகார்களை கூறினர். ரோகிணி சிந்தூரி, தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரூபா அவதூறு பரப்பியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
அதுபோல் ரூபா, ரோகிணி சிந்தூரியின் முறைகேடுகள் குறித்து குறிப்பிட்டு அவற்றின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் மாநில அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது. 2 பேரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதனால் பெண் அதிகாரிகளின் மோதல் விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆடியோ வெளியானது
இந்த நிலையில் ரோகிணி சிந்தூரிக்கு எதிராக மைசூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் கங்கராஜ் என்பவருடன் செல்போனில் ரூபா பேசிய உரையாடல் பதிவு வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் ரூபா, ரோகிணி சிந்தூரி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நீங்கள் வழக்கு தொடுத்து சட்ட போராட்டங்கள் நடத்துமாறும் கூறியுள்ளார்.
சாதாரணமானவர் இல்லை
மேலும் சமூக ஆர்வலர் கங்கராஜூடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா செல்போனில் பேசிய ஆடியோ உரையாடலில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
கங்கராஜ்:- சா.ரா.மகேஷ் மற்றும் ரோகிணி சிந்தூரி இடையே சமாதானம் ஆனதாக சொன்னார்கள். நீங்கள் சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் என்னை பொறுத்தவரையில் எந்த சமாதானமும் செய்து கொள்ளமாட்டேன்.
ரூபா:- நீங்கள் நினைப்பது போல் அவர் (ரோகிணி சிந்தூரி) சாதாரணமானவர் இல்லை. அவர் தெலுங்கு. அவருக்கு கன்னடம் பேச வராது. ஆனால் அவர் தனது கணவரின் சகோதரரை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அவர் சமீபத்தில் ஜி.என்.ஆர். என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதில் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, சூலிபெரே ஆகியோர் வந்து பேசியுள்ளனர். அவர் நானே மடாதிபதியை அழைத்து நிகழ்ச்சியை நடத்தியதாக சொல்கிறாள்.
ஒப்புக்கொள்ளவில்லை
அந்த நிகழ்ச்சிக்கு நான் போகட்டுமா? என்று எனது கணவரிடம் கேட்டுள்ளாள். அதற்கு அவள், தற்போது இந்த அறக்கட்டளையின் நோக்கம் சேவையாற்றுவது, இறுதியில் அரசியலுக்கு வருவது தான் இதன் நோக்கம். பா.ஜனதாவில் போட்டியிட டிக்கெட் வாங்குவதாக கூறுகிறாள். இத்தகைய பச்சோந்திகளுக்கு நீங்கள் எதற்காக உதவி செய்கிறீர்கள்.
சா.ரா.மகேசிடம் சென்று தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளாள். இது சரியா?. வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறுமாறு குமாரசாமி, தேவேகவுடா, செலுவராயசாமி, சபாநாயகர் காகேரியிடம் கேட்டுள்ளாள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரமணரெட்டி, மணிவண்ணன் மூலமாகவும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாள். ஆனால் சா.ரா.மகேஷ் வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொள்ளவில்லை.
பரிமாற்ற தகவல்கள்
பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றபோது, மணிவண்ணன் மூலம் சா.ரா.மகேசிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனாலும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எங்கே போனது?. ஜாலஹள்ளியில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் செலவு விவரங்கள் என்னிடம் உள்ளது. வெளிநாட்டு அதிகாரியுடன் அவர் நடத்திய குறுந்தகவல் பரிமாற்ற தகவல்கள் என்னிடம் உள்ளது. தனது கணவரின் சகோதரரை அரசியலுக்கு கொண்டுவர அவள் திட்டமிட்டுள்ளாள்.
இவ்வாறு உரையாடல் நடந்துள்ளது. ஆனால் அதற்கு கங்கராஜ் என்ன பதில் பேசினார் என்பது பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை.
இந்த ஆடியோ ரோகிணி சிந்தூரி-ரூபா விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.