< Back
தேசிய செய்திகள்
ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகள் ரத்து
தேசிய செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகள் ரத்து

தினத்தந்தி
|
18 May 2023 2:57 AM IST

பாலியல் தொல்லை, சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு:

பாலியல் தொல்லை, சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

துணை போலீஸ் கமிஷனர்

பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் பீமாசங்கர் குலேத். இதற்கு முன்பு அவர், தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்கு போட்டோ, வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, தாவணகெரேயில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தார்.

அப்போது ஸ்டூடியோ உரிமையாளரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை செல்போனில் படம் பிடித்ததுடன், வீடியோவும் எடுத்ததாகவும் பீமாசங்கர் குலேத் மீது ஸ்டூடியோ உரிமையாளர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். அத்துடன் பீமாசங்கர் குலேத் பினாமி பெயரில் சொத்து சேர்த்து 2 அதிகாரிகள் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

2 வழக்குகள் பதிவு

இதுதொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த நபர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பீமாசங்கர் குலேத் மீது பாலியல் தொல்லை மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தன் மீது பெங்களூரு கோர்ட்டில் பதிவாகி இருக்கும் 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

ரத்து செய்து உத்தரவு

அப்போது பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததை செல்போனில் படம் பிடித்ததுடன், வீடியோ எடுத்ததாகவும், பீமாசங்கர் குலேத் மிரட்டி, அதனை அழிக்கும்படி கூறியதால், அழித்து விட்டதாக புகார்தாரர் கூறி இருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அதுபோல், சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தது, பினாமி பெயரில் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த 2 வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்