< Back
தேசிய செய்திகள்
வாலிபரை விடுதிக்கு வரவழைத்து பணம், நகை பறித்த பெண்...!
தேசிய செய்திகள்

வாலிபரை விடுதிக்கு வரவழைத்து பணம், நகை பறித்த பெண்...!

தினத்தந்தி
|
26 Aug 2022 3:30 AM IST

வாலிபரை விடுதி அறைக்கு வரவழைத்து மிரட்டி பணம், நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த கணவர் உள்பட 2 பேரும் சிக்கினர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த வாலிபரை கொல்லத்தை சேர்ந்த ஹசீனா (வயது 28) என்ற பெண் தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். தொடர்ந்து அந்த வாலிபரிடம் இனிக்க, இனிக்க பேசி தனக்கு கொஞ்சம் முன்பணம் நேரில் தருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து வாலிபர் பணத்தை கொடுப்பதற்காக ஹசீனா கூறியபடி கொச்சியில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றார். விடுதி வாசலில் காத்திருந்த ஹசீனா அந்த வாலிபரை வரவேற்று அறைக்கு அழைத்து சென்றார்.

சிறிது நேரத்தில் ஹசீனாவின் கணவர் ஜிதின் (29), அவரது நண்பர் அன்ஷாத் (26) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வாலிபரை தாக்கி கட்டி போட்டுவிட்டு அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம், தங்க மோதிரம், செல்போன் ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

காயமடைந்த வாலிபரை விடுதி ஊழியர்கள் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஹசீனா அந்த வாலிபரை மீண்டும் தொடர்பு கொண்டு மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.15 ஆயிரம் வரை கறந்து உள்ளார். ஆரம்பத்தில் வெளியே சொன்னால் அவமானம் என்று நினைத்த வாலிபர் அந்த பெண்ணின் தொந்தரவு அதிகரித்து வந்ததால் கொச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தி ஹசீனா, அவரது கணவர் ஜிதின், நண்பர் அன்ஷாத் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

கணவரின் திட்டப்படி ஹசீனா அந்த வாலிபரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. மேலும் இவர்கள் வேறு யாரையும் இதுபோன்று மிரட்டி பணம் பறித்துள்ளார்களா? என்ற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்