< Back
தேசிய செய்திகள்
மிஸ்டு கால் மூலம் அறிமுகம்: வாலிபருக்கு காதல் தொல்லை கொடுத்த திருநங்கை... அடுத்து நடந்த விபரீதம்
தேசிய செய்திகள்

'மிஸ்டு கால்' மூலம் அறிமுகம்: வாலிபருக்கு காதல் தொல்லை கொடுத்த திருநங்கை... அடுத்து நடந்த விபரீதம்

தினத்தந்தி
|
25 Jun 2024 6:50 AM IST

வாலிபர் ராகுல் உன்சூர் டவுனில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் மவுரியா(வயது 18). இவர் உன்சூர் டவுனில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, உன்சூர் தாலுகா எஜ்ஜூரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு திருநங்கை செல்போனில் வந்த 'மிஸ்டு கால்' மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் ராகுலின் இளநீர் கடைக்கு வந்தும் அவரை அந்த திருநங்கை சந்தித்து பேசியிருக்கிறார்.

அதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ராகுல் மவுரியாவுக்கு அந்த திருநங்கை காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறி அந்த திருநங்கை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால் ராகுல் வீட்டில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டைவிட்டு ஓடி தலைமறைவானார். அவர் தனது தாயிடம் மட்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இருப்பினும் அவரது தாயிடமும் அவர் தான் இருக்கும் இடத்தை சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த திருநங்கை, ராகுலை தேடி அவரது வீட்டுக்கு சென்று தொல்லை கொடுத்ததாகவும், அவரது பெற்றோரிடம் தகராறு செய்து சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த ராகுல், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்தார். இதுபற்றி அறிந்த திருநங்கை, உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் தன்னுடன் மேலும் சில திருநங்கைகளையும், ஒரு பெண்ணையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர்கள் அனைவரும் ராகுலையும், அவரது பெற்றோரையும் சந்தித்து அந்த திருநங்கைக்கும், ராகுலுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசில் புகார் அளித்துவிடுவோம் என்றும் கூறி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இதனால் வேதனை அடைந்த ராகுல், இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி உன்சூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலுக்கு காதல் தொல்லை கொடுத்த திருநங்கையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்