பருவமழை தாமதமாக வரும் என நம்பிக்கை- முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
|பருவமழை தாமதமாக பெய்யும் என நம்பிக்கை இருப்பதாகவும், மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு காந்திபவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
ஓட்டுக்கு ஒரே மதிப்பு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி, சக்தி திட்டம் தொடங்கப்பட்டு அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற திட்டங்களை அமல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. அன்ன பாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசிடம் அரிசி இருப்பு இருக்கிறது. வெளிச்சந்தையில் அந்த அரிசியை விற்கிறார்கள். ஆனால் கர்நாடகத்திற்கு அரிசி தர மறுக்கிறார்கள்.
நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். சாதி பெயரில் சில சமூக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். சாதாரண மனிதனாக இருக்கட்டும், ஜனாதிபதியாக இருக்கட்டும், அவர்களது ஓட்டுக்கு ஒரே மதிப்பு தான். அதுபோல், அனைத்து சமூகத்தினரும், சமுதாயத்தில் ஒரே மாதிரியானவர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களது கற்றல் திறனை தினமும் வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்
பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாநிலத்தில் பருவமழை பெய்வது காலதாமதமாகி வருகிறது. என்றாலும், பருவமழை தாமதமாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏற்கனவே மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். பருவமழை தாமதமானாலும், விவசாயிகள் விதைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
அதுபற்றியும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். பருவமழை பொய்த்து போனால் கூட, மாநிலத்தில் அடுத்த கட்டமாக ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. பாலின் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதுபற்றி சரியான நேரத்தில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.