< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் 2-வது நாளாக பதற்றம்: இணையதள சேவை துண்டிப்பு
தேசிய செய்திகள்

ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் 2-வது நாளாக பதற்றம்: இணையதள சேவை துண்டிப்பு

தினத்தந்தி
|
26 May 2022 4:14 AM IST

மாவட்டத்துக்கு புதிய பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.

கோணசீமா,

ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டத்துக்கு புதிய பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் நடந்த நிலையில் பதற்றத்தை தணிக்க நேற்று 2-வது நாளாக 144 தடைநீடிக்கப்பட்டிருந்தது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை, மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மீண்டும் கோணசீமா மாவட்டம் என்ற பெயரே தொடர வேண்டும் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்றுமுன்தினம் அமலாபுரம் நகரிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் சென்றனர்.

அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு ஏற்கனவே, கூட்டங்கள் அல்லது பேரணிகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறி ஏராளமானோர் திரண்டனர்.

பேரணியை போலீசார் தடுத்ததால் கலவரம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீசாரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், அந்த பஸ்சை வழிமறித்து தீ வைத்து கொளுத்தினர்.

மேலும், நீர்பாசனத்துறை மந்திரி விஸ்வரூப் முகாம் அலுவலகம், எம்.எல்.ஏ. வின் வீடு ஆகியவையும் சூறையாடி தீ வைக்கப்பட்டன.பல்வேறு வாகனங்களை அப்போது அவர்கள் எரித்தனர். இதனால் பல்வேறு இடங்கள் போர்க்களமாக மாறியது.

இந்த விவகாரம் தற்போது மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில் பதற்றத்தை தணிக்கவும் நேற்று நடந்தது போல் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் கோணசீமா மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு விடிய விடிய தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மீண்டும் கலவரம் மூளாமல் இருக்க 144 தடை உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது.

கலவரப்பகுதியில் இணையதள சேவையை மாநில அரசு தற்காலிகமாக துண்டித்துள்ளது.

மேலும் செய்திகள்