< Back
தேசிய செய்திகள்
சர்வதேச மகளிர் தினம்; பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா என குழப்பமாக உள்ளது - தமிழிசை சவுந்தராஜன்
தேசிய செய்திகள்

சர்வதேச மகளிர் தினம்; பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா என குழப்பமாக உள்ளது - தமிழிசை சவுந்தராஜன்

தினத்தந்தி
|
7 March 2024 10:14 PM IST

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு செய்தி சொல்ல வேண்டுமா அல்லது ஆண்களுக்கு செய்தி சொல்ல வேண்டுமா என குழப்பமாக இருக்கிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் ஒரு பெண் குழந்தை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த உலக பெண்கள் தினத்தில் நான் ஆண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்னவென்றால், பெண்கள் பல தடைகளை உடைத்து வேகமாக முன்னேறி வருகிறார்கள். அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்காதீர்கள்.

அவர்களை முன்னேற விடுங்கள். உங்களை எதிர்பார்த்து அவர்களின் முன்னேற்றம் இல்லை. சிறுமிகளை பூக்களாகவும், மொட்டுகளாகவும் பாருங்கள். அவர்களை சிதைத்து விடாதீர்கள்.

அதேபோல், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளைத்தான் தாய்மார்கள் கண்டித்தும், கண்காணித்தும் வளர்க்க வேண்டும். ஆண்கள் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, ஊறு விளைவிப்பவர்களாக இருந்துவிடக் கூடாது.

மார்ச் 8 மட்டுமே பெண்களுக்கான தினம் இல்லை. அனைத்து தினங்களும் பெண்களுக்கான தினம்தான். இன்னும் பெண்கள் போராட வேண்டியிருப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனால் பெண்கள் தடைகளையும் வாய்ப்புகளாக மாற்றக் கூடியவர்கள். தடைகளை உடைத்து வெற்றியாளர்களாக வலம்வர அனைத்து பெண்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்