சர்வதேச மோசடி அழைப்புகள் விவகாரம்: பயனாளர் பாதுகாப்பு முக்கியம் என்ற இலக்குடன் செயல்படுகிறோம்; வாட்ஸ்அப் தகவல்
|எங்களுடைய புதிய திட்டத்தின்படி, தற்போது, தொலைபேசி அழைப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறையும் என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அழைப்பு விடுத்து சர்வதேச அளவில் மோசடியில் ஈடுபடும் நிகழ்வை அடுத்து, அதுபற்றி விளக்கம் கேட்டு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த விசயத்திற்கு அந்நிறுவனம் பதில் அளித்து உள்ளது. அதில், மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு, பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாப்பதே அடிப்படை.
நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசயத்திலும் எங்களுடைய பயனாளர்களே முக்கியம் வாய்ந்தவர்களாக உள்ளனர். அதனால், இந்திய அரசின் பயனாளர்கள் பாதுகாப்பு என்ற இலக்குடன் முழு அளவில் இணைந்து செயல்படுகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்கள், என்கிரிப்டட் முறையிலான சேவையை பெற்று, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முன்னிலையில் நாங்கள் இருக்கிறோம்.
தொடர்ந்து, பிளாக் அண்டு ரிப்போர்ட் போன்ற பாதுகாப்பு கருவிகளையும் வழங்கி வருகிறோம். பயனாளர் பாதுகாப்பு பற்றிய கல்வி மற்றும் எச்சரிக்கை உணர்வையும் தொடர்ச்சியாக கட்டமைத்து வருகிறோம். தவறான நோக்கங்கள் கொண்ட நபர்களை பயனாளர்கள் எளிதில் கண்டறிய முடியும்.
அதில், சர்வதேச மோசடி அழைப்புகள் ஒரு புதிய வழியாக உள்ளது. அதில் மிஸ்டு கால் கொடுக்கின்றனர். ஆர்வத்துடன் பயனாளர்கள் பதிலுக்கு அழைத்தோ அல்லது செய்தி அனுப்பும்போதோ அவர்கள் சிக்கி கொள்கின்றனர் என தெரிவித்து உள்ளது.
எங்களுடைய புதிய திட்டத்தின்படி, தற்போது, தொலைபேசி அழைப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறையும். தற்போதுள்ள மோசடி அழைப்புகளை எங்களால் திறமையாக கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.