பொள்ளாச்சியில் 2-வது நாளாக களைகட்டிய சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா
|சர்வதேச பலூன் திருவிழாவிற்காக 8 நாடுகளில் ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு வானில் பறக்கவிடப்படுகின்றன.
கோவை,
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடம்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்படும். இந்த பலூன்களில் ஏறி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யலாம்.
இந்த பலூன் திருவிழாவானது இந்தியாவிலேயே கோவை அருகே பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. இந்த திருவிழா பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், இன்று 2-வது நாளாக பலூன் திருவிழா களைகட்டியது.
தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திருவிழாவில், பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு வானில் பறக்கவிடப்படுகின்றன. யானை, தவளை, மிக்கி மவுஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களைக் கொண்ட ராட்சத பலூன்களில் 100 அடி உயரம் வரை செல்ல ரூ.1,600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.