'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான எதிர்பார்ப்புகளை இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றும்' - தேவேந்திர பட்னாவிஸ்
|ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
இந்நிலையில் மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், 'வளர்ச்சியடைந்த இந்தியா' (விக்சித் பாரத்) திட்டத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். இந்த பட்ஜெட்டில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல நலத்திட்டங்களை அவர் உறுதி செய்துள்ளார்.
நமது குடிமக்களுக்கு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கும் சோலார் பேனல்கள் நிறுவுவதும் அத்தகைய திட்டங்களில் ஒன்றாகும். குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
நாட்டின் இளைஞர்களுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை வட்டியில்லா கடன் வாங்கும் திட்டங்கள், சுய தொழில்கள் தொடங்குதை ஊக்குவிக்கும். 'கிசான் சம்பாதா' போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வழியை ஏற்படுத்தும் பட்ஜெட்டை வழங்கிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.