டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் சார்பில் புதிய கொள்கை வகுக்கும் வரை ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி அரசின் கொள்கை திட்டம் ஜூலைக்குள் தயாராகிவிடும். இதனிடையே அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் மணீஷ் வஷிஷ் வாதிட்டார். மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி இருக்கக்கூடிய சூழலில் டெல்லி அரசு இன்னும் அதை உருவாக்கவில்லை என உபேர் நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அரசின் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்கள் இயங்க முடியாது என கருத்து தெரிவித்ததுடன், டெல்லியில் ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க இடைக்கால தடை விதித்தது. இவற்றை இயங்க அனுமதித்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.