அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு
|அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
புதுடெல்லி,
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கும் நிலையில், அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது இல்லை. அவர் வேட்பாளராக இருந்தாலும்கூட ஜாமீன் கொடுக்கப்பட்டது இல்லை.
ஒவ்வொரு நபருக்கும் தங்களது பணி, தொழில் சம அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான். எனவே, தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரசியல்வாதிக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்டக்கூடாது. அப்படி காட்டுவது சமத்துவத்துக்கு எதிரானது.
இந்த உண்மை மற்றும் சட்டரீதியான அம்சங்களை கருத்தில்கொண்டு, இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். இக்கோரிக்கை, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான சட்டத்தின் ஆட்சியை மீறக்கூடியது. ஒரு அரசியல் தலைவரின் பிரசாரத்தை விட ஒரு விவசாயி அல்லது ஒரு வியாபாரியின் பணி எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தால், சிறையில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் அதே கோரிக்கையை எழுப்புவதை குறை காண முடியாது. இது தவறான முன்னுதாரணமாகி விடும்.
ஒரு விவசாயியை விட அரசியல்வாதிக்கு சிறப்பு சலுகை அளிப்பதை நியாயப்படுத்தக்கூடிய தத்துவம் எதுவும் இல்லை. மற்றவர்களை போலவே அவரும் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அமலாக்கத்துறை கூறியுள்ளது.
கடந்த முறை விசாரணையின் போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையின் பெரும் எதிர்ப்பு இடையே இன்று அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.