< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
24 July 2023 1:26 AM IST

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மட்டும் இந்த மாத தொடக்கத்தில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி உள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் வடகர்நாக மாவட்டமான தார்வாரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தில் சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, உத்தரகன்னடா, தார்வார், மைசூரு, மண்டியா மற்றும் வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தலைநகர் பெங்களூருவில் பரவலாக மழை பெய்தது.

கனமழையால் துங்கா, பத்ரா, ஹாரங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹேமாவதி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியதால், கலசாவில் இருந்து ஒரநாடு சாலையில் உள்ள ஹெப்பாலே பகுதியில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல பத்ரா ஆற்றில் உள்ள ஜாம்லே என்ற இடத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா வசத்தாரே என்ற இடத்தில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் சிக்கமகளூரு-மங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதேபோல சிக்கமகளூரு மாவட்டம் முல்லையன்கிரி சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கலசா தாலுகா சம்பிகேகான் கிராமத்தில் சங்கரேகவுடா என்பவர் மரம் முறிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஒசப்பேட்டையை அடுத்த சிவபுரா கிராமத்தில் ராஜேந்தர் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதேபோல தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் மழைநீர் புகுந்தது.

இதனால் ஏராளமான காபி தோட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. சிருங்கேரியில் சாரதம்மன் கோவிலில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மழைநீர் தேங்கியது.

தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மங்களூரு, பெல்தங்கடி, சுள்ளியாவில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மங்களூரு லேடிஹில் நாராயண குரு சர்க்கிளில் இருந்து உருவா ஸ்டோர் வரையிலான முக்கிய சாலையில், ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மங்களூருவில் மொத்தம் 118 மின் கம்பங்கள், 7 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. மேலும் 30-க்கும் ேமற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

கனமழையால் நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குமாரதாரா ஆற்றில் இருந்து வெளியேறிய மழைநீர் குக்கேசுப்பிரமணியா கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் குமாரதாரா ஆற்றிற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சுநாதேஸ்வரா கோவிலை மழைநீர் சூழ்ந்தது.

நேத்ராவதி ஆற்று பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. அப்போது அந்த பாலத்தில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சிக்கி கொண்டது. அதை மாநில மீட்பு படையினர், கயிறுகளை கட்டி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

ேநத்ராவதி ஆற்றங்கரையோரங்களில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் ஏராளமான விவசாய பயிர்கள் நாசமானது. மேலும் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததல் மின்தடை ஏற்பட்டது. அரபிக்கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. உடுப்பியில் பெய்த மழையால் இர்கிகத்தே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. தோட்டம் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் உள்ள முக்கனமனே ஆற்றில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுவதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் முக்கனமனே ஆற்றில் சிக்கி உயிருக்காக போராடினார். அவரை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் நாசமானது.

மேலும் தாழ்வான பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல உப்பள்ளி-தார்வார், வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. உப்பள்ளி-தார்வார் நகரம் மற்றும் புறநகர் மட்டுமின்றி அல்னாவர், குந்துகோல் பகுதியில் மழைக்கு 30 வீடுகள் இடிந்து விழுந்தன.

கட்னூர் கிராமத்தில் சிவனகவுடா என்பவரின் வீட்டில் இருந்த கொட்டகைகள் இடிந்து விழுந்ததில் 5 செம்மறி ஆடுகள் செத்தன. உனகல் ஏரி நிரம்பி, கிராமத்திற்குள் மழை நீர் புகுந்ததால் ஏராளமான வீடுகள் நீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

மாநில மீட்பு படையினர், போலீசார், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

பெலகாவி மாவட்டத்தில் கட்டபிரபா, வேதகங்கா, தூத் கங்கா, கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 16 தரைப்பாலங்கள் உள்பட ஏராளமான பாலங்கள் நீரில் மூழ்கின. மகதாயி ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. கரடகா கிராமத்தில் பெங்காலி பாபா கோவில் மற்றும் அருகே உள்ள 2 மசூதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 92 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ெதாடர் கனமழை பெய்து வருவதால் பெலகாவி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பெலகாவி, கித்தூர், கானாபுரா ஆகிய 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தார்வார், உடுப்பி மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர கன்னடா மாவட்டத்தில் காளி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்ரா அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், அணையில் நீர் இருப்பு 31 மீட்டர் உயர்ந்துள்ளது.

கலபுரகி டவுன் துபாய் காலனியை சேர்ந்தவர்கள் அபிசேக்(வயது 11) மற்றும் அஜய்(12). இந்த 2 சிறுவர்களும் தங்களது வீட்டின் அருகே உள்ள பெரிய பள்ளத்தில் தேங்கிய மழை வெள்ளத்தில் நேற்று மூழ்கி பலியானார்கள்.

ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஹவனூர் போன்ற கிராமங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சகாரா, ஹம்வசி போன்ற கிராமத்தை சேர்ந்தவர் படகுகள் மூலம் ஆற்றுப்பகுதியை கடந்து செல்கின்றனர். யாதகிரி மாவட்டத்தில் 32 வீடுகள் பகுதியாக சேதமடைந்து உள்ளது.

விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 41 ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

பெலகாவியில் பாயும் கட்டபிரபா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹிடகல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மழைநீர் கசிவுக்கு மத்தியில் மாணவர்களுக்கு உணவுகள் சமைக்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகத்தில் வருகிற 27-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 27-ந்தேதி வரை 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையும், யாதகிரி, ஹாசன், கலபுரகி, தார்வார், பெலகாவி மற்றும் பீதர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 27-ந்தேதி 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சாப்ரில் விடுக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் மாநிலத்தில் உள்ள அணைகள் விரைவில் நிரம்பி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ேநற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 91.82 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9,514 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5,249 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், நேற்று மாலை நிலவரப்படி 17,412 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7,749 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.

மேலும் செய்திகள்