சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்: பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உஷார்..!!
|பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது உஷாராக இருப்பதுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது
புதுடெல்லி,
உருமாறிய கொரோனா, சீனாவில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார மந்திரி அறிக்கை அளித்தார். பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது உஷாராக இருப்பதுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அறிக்கை
அதிதீவிரமாக தொற்றிக்கொள்ளுகிற சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா (பிஎப்.7), சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் முக கவசம் அணிந்த நிலையில் நேற்று சபைகளை நடத்தினர். உறுப்பினர்களும் கூட முக கவசங்களை மீண்டும் அணியத்தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிக்கை அளித்தார்.
சவாலை நிர்வகிக்க யோசனைகள்
அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:-
* உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 5.87 லட்சமாக உள்ள நிலையில், இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 153 என்ற அளவில் உள்ளது.
* சுகாதார அமைச்சகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. தற்போதைய சவாலை நிர்வகிக்க குறிப்பிட்ட தலையீடுகளையும் முன்மொழிந்துள்ளது.
* நமது நாட்டில் புதிய வைரஸ்கள் நுழைவதை குறைக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குவோரில் 2 சதவீதத்தினருக்கு (ரேண்டம்) விமான நிலையங்களில் பரிசோதனை செய்வது இன்று (வியாழக்கிழமை) தொடங்கி விட்டது.
* நேரத்துக்கு நேரம் நமது எதிரி (கொரோனா) மாறிக்கொண்டே இருக்கிறது. நாம் விடா முயற்சியுடனும், உறுதியுடனும் கொரோனாவுக்கு எதிரான போரை நாம் ஒன்று சேர்ந்து தொடர வேண்டிய தேவை உள்ளது.
பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம்
* ஒழுங்கான இடைவெளியில் கொரோனா நிலைமையை சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருகிறது. தற்போதைய சவாலை நிர்வகிக்க ஏற்ற வகையில் சில குறிப்பிட்ட யோசனைகளையும் முன்மொழிந்துள்ளன.
* எதிர்வரும் பண்டிகைகள், புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, முக கவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், சுவாச சுகாதார செயல்பாடுகள் ஆகிய கொரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது தொடர்பான பயனுள்ள விழிப்புணர்வை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
* கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் போடுவதை அதிகரிப்பதையும் மாநிலங்கள் உறுதி செய்வதுடன், இதுபற்றிய விழிப்புணர்வையும் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மாநிலங்களவையில் சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று பேசும்போது, "தற்போது சர்வதேச பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும், தேவைப்பட்டால் எல்லா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதை கட்டாயம் ஆக்க பரிசீலிக்கப்படும்" என தெரிவித்தார்.