< Back
தேசிய செய்திகள்
சோமாலியா கடல் பகுதி: கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் மீட்பு

Image Courtacy: Indian Navy

தேசிய செய்திகள்

சோமாலியா கடல் பகுதி: கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் மீட்பு

தினத்தந்தி
|
17 March 2024 1:25 AM IST

சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை வெற்றிகரமாக முறியடித்தது.

புதுடெல்லி,

செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது.

இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது. அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை இந்திய கடற்படை நேற்று முன்தினம் மீட்டது.

இந்த நிலையில் சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை வெற்றிகரமாக முறியடித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து கடற்படை வெளியிட்ட அறிக்கையில், "சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட எம்.வி.ருயென் என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து, 15-ந் தேதி எம்.வி.ருயென் சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது சரக்கு கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சரக்கு கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் அவர்களின் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சோமாலியா கடல் பகுதி கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும், 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படை வீரர்களிடம் சரணடைந்தனர் என்றும் அந்த கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்