< Back
தேசிய செய்திகள்
பணவீக்கம், ஜி.எஸ்.டி. வரிவிகித உயர்வு; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

பணவீக்கம், ஜி.எஸ்.டி. வரிவிகித உயர்வு; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
18 July 2022 12:27 PM IST

நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.



புதுடெல்லி,



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகிய விவகாரங்களை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என கூறப்பட்டது.

இதேபோன்று, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இதன்படி, பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு முதல் முறையாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில், நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமரும்படி அவை தலைவர் கூறினார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்