மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை
|துமகூருவில் மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் குறித்து நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தவிட்டார். அந்த பெண்ணை சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தார்.
பெங்களூரு:
துமகூருவில் மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் குறித்து நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தவிட்டார். அந்த பெண்ணை சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தார்.
பச்சிளம் குழந்தை சாவு
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ். இவரது மனைவி வசந்தா. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம் (ஜுன்) 22-ந் தேதி வசந்தாவுக்கு இரட்டை குழந்தை பிறந்திருந்தது. அதில், ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கடந்த 10-ந் தேதி தாயும்,சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொல்லரஹட்டி கிராமத்தில் எந்த பெண்ணும் குழந்தை பெற்றால் ஊருக்குள் உடனடியாக வரக்கூடாது என்றும், அவர்கள் ஊருக்கு வெளியே பச்சிளம் குழந்தையுடன் தான் தங்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதன்படி, கிராமத்திற்கு வெளியே வயலில் குடிசை அமைத்து வசந்தாவும், பச்சிளம் குழந்தையும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது மழை பெய்து வருவதால் குடிசையில் தங்கி இருந்த அந்த பச்சிளம் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்திருந்தது.
நீதிபதி நேரில் விசாரணை
இந்தசம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. பச்சிளம் குழந்தை இறந்த பின்பும் வசந்தா கடந்த 2 நாட்களாக அதே குடிசையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை கிராமத்திற்குள் சேர்த்து கொள்ளும்படி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில், குழந்தை பலியான பின்பும் வசந்தா குடிசையிலேயே தங்கி இருப்பது பற்றி நீதிபதி நூர் உன்னிசாவுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று அவர் கொல்லரஹட்டி கிராமத்திற்கு நேரில் சென்றார். அப்போது அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர். உடனே அவர்களை மூடநம்பிக்கை காரணமாக குழந்தையை பலி கொடுத்து விட்டீர்கள் தற்போது அந்த பெண்ணும் மிகுந்த சோர்வுடன் காணப்படுகிறார், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் குடிசையில் தங்க வைப்பது சரியா? என அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, அந்த குடிசை அகற்றப்பட்டது.
பெண்ணுக்கு சிகிச்சை
மேலும் வசந்தாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், அங்கிருந்து துமகூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் நீதிபதி நூர் உன்னிசா மேற்கொண்டார். சித்தேஷ் மற்றும் வசந்தாவிடம் இருந்து புகார் மனுவையும் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் கிராம மக்களை அழைத்து அவர் சட்ட விதிமுறைகள் குறித்து தெரிவித்தார். பின்னர் கிராமமக்கள் மத்தியில் நீதிபதி நூர் உன்னிசா பேசியதாவது:
கிராமத்திற்கு அனுமதிக்க வேண்டும்
கிராம மக்களுக்கு சட்டம் பற்றிஎதுவும் தெரியவில்லை. அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிராமங்களுக்கு சென்று சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. தற்போதும் இதுபோன்று மூட நம்பிக்கையுடன் இருக்கிறோம். குழந்தையின் சாவுக்கு நாம் அனைவரும் காரணமாகி விட்டோம். பெற்றோர், கிராமத்தினர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. இந்த சம்பவத்தால் துமகூரு மட்டும் இல்லை, நமது மாநிலத்திற்கே தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று நடந்து கொள்வது சட்டத்திற்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் பெண்கள் எச்சரித்து கொள்ள வேண்டும். அந்த பெண்ணை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க கூடாது. பாம்பு, தேளை விட மனிதர்கள் அதிக விஷம் கொண்டர்களாக இருக்கிறோம். எனவே அந்த பெண்ணை கிராமத்திற்குள் அனுமதிக்க வேண்டும். 2 குழந்தைகளும் இறந்து விட்டதால் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். இனி வரும் நாட்களில் எந்த பெண்ணையும் ஊரை விட்டு ஒதுக்கிவைக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.