கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய குழு அறிக்கை
|கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று மத்திய குழு அறிக்கை சமர்பித்துள்ளது
புதுடெல்லி,
கேரளாவில் சமீப வாரங்களில் வெறிநாய்க்கடியால் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதற்கான காரணங்களை ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி வைத்தது. நேரில் ஆய்வு செய்த அக்குழு, தனது அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தடுப்பூசி செயல்திறன் குறைவாக இருந்ததால்தான் வெறிநாய்க்கடி மரணங்கள் ஏற்பட்டதாக கூறுவது தவறு. ஒரு மரணத்துக்கு கூட தடுப்பூசி காரணமல்ல. பெரும்பாலான மரணங்கள் தடுக்கக்கூடியதாக இருந்தன. நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் மரணங்களுக்கு காரணம்.
மேலும், உரிய நேரத்தில், முறையான வெறிநாய்க்கடி மருத்துவம் கிடைக்காததும் ஒரு காரணம். நாய்க்கடி காயத்தை கழுவும் வசதி, மருத்துவ மையங்களில் இல்லாததும் ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தடுப்பூசி, நல்ல செயல்திறன் கொண்டது என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.