'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து' - உத்தரகாண்ட் மந்திரி
|இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து என்று உத்தரகாண்ட் மந்திரி தெரிவித்தார்.
டேராடூன்,
காஷ்மீர் ஸ்ரீநகரில் தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன். வன்முறையை தூண்டும் மோடி, அமித்ஷா, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அந்த வலியை அறியமாட்டார்கள். ராணுவத்தினருக்கும், காஷ்மீரிகளுக்கும்தான் அந்த வலி தெரியும் என்று பேசியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக உத்தரகாண்ட் விவசாய மந்திரி கணேஷ் ஜோஷி நேற்று நிருபர்களிடம், 'ராகுல் காந்தியின் அறிவை அறிந்து நான் பரிதாபப்படுகிறேன். ஆனால் அவரவருக்கு உள்ள அறிவுக்கு ஏற்பத்தானே பேச முடியும்?
தியாகம், இந்திரா காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் போன்றோர்தான் தியாகம் செய்திருக்கின்றனர். இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டது தியாகமல்ல, விபத்து. தியாகத்துக்கும் விபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரதமர் மோடியால்தான் ராகுல் காந்தியால் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்ற முடிந்தது. காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்காவிட்டால் அங்கு இயல்புநிலை திரும்பியிருக்காது' என்று கூறினார்.