'பசு வதை சாபத்தால் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் உயிரிழந்தனர்' - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
|துறவி கர்பத்ரி மகாராஜ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சபித்தார் என பா.ஜ.க. எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அனந்த்குமார் ஹெக்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பசுவதைத் தடைச் சட்டம் குறித்து பெரும் போராட்டம் நடந்தது. அதில் பல துறவிகள் உயிரிழந்தனர், பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்திரா காந்தி முன்னிலையில் நூற்றுக்கணக்கான பசுக்கள் வெட்டப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்டன.
அந்த சமயத்தில் துறவி கர்பத்ரி மகாராஜ் இந்திரா காந்தியை சபித்தார். 'கோபாஷ்டமி' நாளிலேயே உங்கள் குலம் அழிந்துவிடும் என்று சாபமிட்டார். அதைத் தொடர்ந்து சஞ்சய் காந்தி கோபாஷ்டமி அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். இந்திரா காந்தி கோபாஷ்டமி அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலை, பட்கால் நகரில் உள்ள மசூதிக்கும் ஏற்படும். இது எனது முடிவு அல்ல, இந்து சமுதாயத்தின் முடிவு. இதை அச்சுறுத்தல் என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம். அதேபோல், சிராசி சி.பி. பஜார் பகுதியில் ஒரு மசூதி உள்ளது. இது முன்பு விஜய விட்டல் கோவிலாக இருந்தது. எங்கள் எதிரி காங்கிரஸ் அல்ல, சிலரது மனநிலைதான்."
இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே கூறினார்.
அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தர கன்னடா எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே அரசியல் நோக்கத்திற்காக பேசிய பேச்சு அவரது கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மத்திய மந்திரியாக இருந்தபோது அரசியல் சட்டத்தை மாற்றுவேன் என்று கூறிய அனந்த்குமார் ஹெக்டேவிடம் சிறந்த கலாச்சாரத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று விமர்சித்துள்ளார்.