இந்தியாவிடம் இருந்து 'தேஜஸ்' போர் விமானத்தை வாங்க மலேசியா முடிவு
|இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், 'தேஜஸ்' என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து கொடுக்க அந்த நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தநிலையில், மலேசியாவும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. தன்னிடம் உள்ள போர் விமானங்களுக்கு மாற்றாக வேறு போர் விமானங்களை வாங்க மலேசியா முடிவு செய்தது. சீனா, தென்கொரியா, ரஷியா ஆகிய நாடுகள் தங்களின் போர் விமானங்களின் விலைப்புள்ளிகளை அளித்தன. சீன போர் விமானத்தின் விலை குறைவாக இருந்தபோதிலும், இந்தியாவின் தேஜஸ் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
விரைவில் மலேசிய குழு இந்தியாவுக்கு வந்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தெரிகிறது. இதன்மூலம், மற்ற நாடுகளும் தேஜஸ் விமானத்தை ஏற்றுக்கொள்ள வழி பிறக்கும் என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன தலைவர் ஆர்.மாதவன் கூறினார்.