ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு
|ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
ஐதராபாத்,
இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.
ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.
அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்படுகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநிலத்தின் 119 தொகுதிகளில் இருந்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் விழாவில் பங்கேற்பவர்களுக்கு சட்டசபை வளாகத்தில் உணவு, இனிப்பு, மோர், தண்ணீர் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
பிரகாஷ் அம்பேத்கர்
அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.
இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று ஆய்வு செய்தார். மேலும் மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.