நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி
|நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு நிதி ஆண்டின் (2022-2023) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம்.
சீனா இதே காலாண்டில் வெறும் 0.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.
முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.36 லட்சத்து 85 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.32 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், 13.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி கணித்திருந்த 16.2 சதவீத வளர்ச்சியை விட இது குறைவு ஆகும்.