< Back
தேசிய செய்திகள்
ரஷிய-உக்ரைன் போருக்கு இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஒரு தீர்வு காணும்: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை
தேசிய செய்திகள்

ரஷிய-உக்ரைன் போருக்கு இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஒரு தீர்வு காணும்: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை

தினத்தந்தி
|
21 Feb 2023 11:50 AM IST

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஒரு தீர்வு காணும் என ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது. ஓராண்டை நெருங்க இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், போரானது இரு தரப்பிலும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

உக்ரைனின் தலைநகர் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், பின்னர் அந்நாட்டிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்பதும் தொடர்ந்து வருகிறது.

இதனை அடுத்து, உக்ரைனை பலவீனமடைய செய்யும் நோக்கில், கடந்த அக்டோபரில் இருந்து அந்நாட்டின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு, அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீப மாதங்களாக தொடர்ந்து, உக்ரைனின் ராணுவ நிலைகள் மற்றும் பிற பெரிய உட்கட்டமைப்புகளை நோக்கி ரஷியா, ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடுத்து வருகிறது.

இதனை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலக நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளார். இதன்படி, சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த முனிச் மாநாட்டின் ஒரு பகுதியாக பேசும்போது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்கள், போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டார்.

உக்ரைன் கோரிக்கையை ஏற்று, மேற்கத்திய நாடுகளும் ஆயுதங்களை வினியோகிக்க முன்வந்துள்ளன. உக்ரைனுக்கு நவீன ரக பெரிய பீரங்கிகளை அளிக்க மேற்கத்திய நாடுகள் உறுதி அளித்தன.

உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆயுத, நிதியுதவி ஆகியன அளித்து, அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் பைடன், உக்ரைனுக்கு நேற்று திடீரென பயணம் மேற்கொண்டார். இதனால், போரில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்கும் சாத்தியம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், புதுடெல்லியில் இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் யூகோ ஆஸ்டுடோ செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திடம் இருந்து நாங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம்.

வழக்கம்போல் நடைபெற கூடிய வாழ்க்கை முறையிலான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது முற்றிலும் நியாயமற்றது.

ஐ.நா. அமைப்பின் விதிகளை தெளிவாக மீறியதொரு விசயம் ஆகும். ஆனால், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில், நல்ல முறையிலான முடிவு எட்டப்படுவதற்கு, எந்த வகையிலாவது இந்தியா ஒரு தீர்வு காணும்.

உக்ரைனுக்கு அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக நாம் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்