"2023 ஆகஸ்ட் 15-ல் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் செயல்பாட்டுக்கு வரும்" - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
|ஹைட்ரஜன் ரெயிலை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்,
உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரெயில் ஜெர்மனியில் கடந்த மாதம் செயல்பாட்டு வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது. அதே சமயம் வேகம், நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மற்ற ரெயில்களை விட ஹைட்ரஜன் ரெயில் சிறந்து விளங்குகிறது.
இந்தியாவிலும் ஹைட்ரஜன் ரெயிலை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த ரெயில் தயாரிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
உலகின் தலை சிறந்த 5 ரெயில்களில் ஒன்றாக இந்த ரெயில் உள்ளது என்று தெரிவித்த அவர், அடுத்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியாவில் ஹைட்ரஜன் ரெயில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.